39 நாட்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு ஊர்வலமாக வந்தது செஸ் ஒலிம்பியாட் சுடர்: அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் பெற்றனர்

சென்னை:  சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சுடர் 39 நாட்களுக்கு பிறகு மாமல்லபுரத்திற்கு  வந்தது. சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட் - செரட்டான் தனியார் நட்சத்திர ரிசார்ட்டில் நாளை முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை நடக்க உள்ளது. செஸ் ஒலிம்பியாட் சுடர், பல்வேறு கண்டங்களுக்கு பயணிப்பது வழக்கம். இம்முறை, சுடர் ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெற்றது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் ஆர்கடி டிவோர் கோவிச் ஒலிம்பியாட் சுடரை கடந்த 19ந் தேதி மாலை பிரதமர் மோடி கையில் ஒப்படைத்தார். இதையடுத்து, செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, அந்த ஒலிம்பியாட் சுடரை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார். பின்னர், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்தியாவில் உள்ள 75 முக்கிய நகரங்களை கடந்து, 39 நாட்களுக்கு பிறகு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவாயில் வழியாக நேற்று காலை வந்தது.

இந்த ஒலிம்பியாட் சுடரை, இந்திய செஸ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், தமிழக அமைச்சர்கள் மெய்யநாதன் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கையில்  வழங்கினர். சுடரை, பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஒலிம்பியாட் சுடரை எந்தி ஊர்வலமாக மாமல்லபுரம் கற்கரை கோயில் வளாகத்தில் வைத்தனர். பின்னர், செஸ் போர்டு போன்ற கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினர். ஒலிம்பியாட், நினைவாக பிரமாண்ட பலூன்களும் பறக்க விடப்பட்டது.

Related Stories: