நீதிமன்ற உத்தரவால் ஒரே நாளில் எதையும் மாற்ற முடியாது: குப்பை கிடங்கிற்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: குப்பை கிடங்கிற்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, நீதிமன்ற உத்தரவால் எதையும் ஒரே நாளில் மாற்ற முடியாது என கூறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியைச் சேர்ந்த அவிஜித் மைக்கேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சீராடும்கானல் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை நிரந்தமாக மூட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், ‘‘சமூகத்தில் மற்றவர்களைப் பற்றிய அக்கறையின்மையும், அதிகப்படியான பேராசையும் நிறைந்துள்ளது. இப்படி இருக்கும்போது நீதிமன்றம் உத்தரவிட்டு எதையும் ஒரே நாளில் மாற்ற முடியாது. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளின் சுத்தத்தை பற்றி பேசும் பலர், தெருவில் குப்பைகளையும், கழிவுகளையும் போட சிறிதும் யோசிப்பதில்லை’’ என்றனர். பின்னர் மனுவிற்கு, ஒன்றிய மற்றும் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்கள், ஒன்றிய, மாநில வனத்துறை செயலர்கள், திண்டுக்கல் கலெக்டர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 8 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: