பள்ளி மாணவிகள் மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். : விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் பிளஸ் 2 மாணவி சரளா தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.

மாணவி சரளாவின் மரணம் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும். இது சந்தேக மரணம் என காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கை தீர விசாரித்து குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும்.

தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவ, மாணவிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: