காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த 21ம்தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜர் ஆனார். இதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இந்நிலையில், மீண்டும் இன்று சோனியாகாந்தி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதை தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக அவர் ஆஜராகியுள்ளார். அவருக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோனியா காந்திக்கு எதிரான அடக்குமுறை என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் எதிராக தொடுக்கப்பட்ட அடக்குமுறை என்பதால், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில், காங்கிரஸ் கட்சி ரீதியாக உள்ள 7 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் வண்ணாரப்பேட்டை தபால்  நிலையம் அருகில் மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர்  கோபண்ணா, முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், கவுன்சிலர் தீர்த்தி உட்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர். அதேபோன்று, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில் துறைமுகம் நாட்டுப்பிள்ளையார் கோயில் அருகே அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு, துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோன்று, தமிழக இளைஞர் காங்கிரசார் சார்பில் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோன்று மாவட்ட தலைவர்கள் தலைமயைில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில், ஒன்றிய அரசின் அடக்கு முறையை கண்டித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: