மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 11 பேர் சஸ்பெண்ட்: இந்த வாரம் முழுவதும் பங்கேற்க தடை

டெல்லி: திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த 18ம் தேதி முதல் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.  இந்நிலையில் இன்று காலை கூடியவுடன் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மீண்டும் கூடிய நிலையில் விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு குறித்து அவையின் மையப்பகுதியில் எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவையை முடக்கியதால் 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.இளங்கோ, சண்முகம், கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, சுஷ்மிதா தேவ், டோலாசென், உள்ளிட்ட 11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: