நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமங்களில் விவசாய பணி தீவிரம்-ஒன்றிய அதிகாரிகள் கண்காணிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பெய்த பருவமழையால், ஊரக வேலையுறுதி திட்ட பயனாளிகள் மூலம் கிராமங்களில் விவசாய பணி தீவிரமாக நடைபெறுகிறது என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் விவசாயம் நிறைந்த பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சி ஒன்றியம்,ஆனைமலை தாலுகாவில், ஆனைமலை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் வருடத்தில் 100 நாட்கள் வேலை என்று நிர்ணயிக்கப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணி நடைபெற்று வருகிறது.

சுமார் 20 ஆண்டுக்கு முன்பு ஒரு பயனாளிக்கு நாள் ஒன்றுக்கு கூலித்தொகை  ரூ.80 ஆக நிர்ணயிக்கப்பட்டது. வெவ்வேறு ஆண்டுகளில் கூலித்தொகை உயர்ந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு கூலித்தொகை ரூ.280ஆக உயர்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஊராட்சியிலும் பயனாளிகளின் வேலைக்கு தகுந்தாற்போல் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில், ஒவ்வெரு ஊராட்சியிலும் சுமார் 150க்கும் மேற்பட்ட பயனாளிகள் பணியாற்றி வந்தனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சிகளில் வேலையுறுதித்திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குறைவானது. கடந்த ஆண்டு, 100 நாள் வேலை முடிந்த பயனாளிகள் மீண்டும் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டனர். இதனால் ஊராட்சிகளில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்யும் போது, கூடுதல் கூலித்தொகையை எதிர்பார்த்து பல பயனாளிகள்,  தனியார் விவசாய பணிக்கு செல்வதை தொடர்ந்தனர்.

ஆனால், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து விவசாய நிலங்கள் செழிப்படைய ஆரம்பித்தாலும், ஊராட்சி  மூலம் நடைபெறும் விவசாய பணியிலேயே பயனாளிகள் பலரும் ஈடுபடுத்தி கொண்டனர். இதனால் இந்த முறை, கிராமங்களில் நடைபெற்ற ஊரக வேலையுறுதித்திட்ட பணிகளில் பயனாளிகளின் எண்ணிக்கை குறையாமல்  இருப்பதுடன், ஒவ்வொரு கிராமங்களிலும் 70 முதல் 90 பேர் வரையிலும், சில ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்டோர் என வெவ்வேறு நாட்களில் வேலை பார்க்கின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வால் 55 வயதுக்கு மேல் உள்ள வயனதானவர்களும் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமானது. மேலும் பருவமழை தொடர்ந்ததால், மண் வரப்பு அமைத்தல், வட்டபாத்தி அமைத்தல், மரக்கன்றுகள் நடவு பணியை மேற்கொள்ளுதல், தனியார் தோட்ட பணி, ஆடு,மாடு கொட்டகை அமைத்தல், வட்டக் கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணி தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. அதனை, ஒன்றிய அலுவலர்கள் கண்காணிக்கின்றனர்.  ஊராட்சி கிராமங்களில் ஊரக வேலையுறுதித்திட்ட பயனாளிகள் எண்ணிக்கை இந்த முறை குறையாமல் இருப்பது, வரும் நாட்களிலும் மேலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

Related Stories: