திருவொற்றியூரில் ரூ.3 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்: அமைச்சர் தகவல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் 43வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட பட்டய போட்டி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் போட்டி வெள்ளிக்கிழமை திருவொற்றியூரில் தொடங்கியது. பகல், இரவு போட்டியாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் திருவொற்றியூரில் உள்ள பூப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஆடவர் மற்றும் மகளிர் என 12 அணிகளில் 172 பேர் பேர் பங்கு பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்றது. பூப்பந்தாட்ட கழக பொதுச்செயலாளர் வி.எழிலரசன் வரவேற்றார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு அணி, பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற கர்நாடக அணிக்கு சுழற்கோப்பை, பரிசுத்தொகை தலா ₹50 ஆயிரம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

மேலும் இரண்டு, மூன்று, நான்காம் இடத்தை பிடித்தவர்களுக்கும் கோப்பை, பரிசுத்தொகை, பங்கேற்ற பிற அணிகளுக்கு ஆறுதல் பரிசு ஆகியவற்றை வழங்கினார். அப்போது அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், ‘‘திருவொற்றியூரில் விளையாட்டுத் திடல் அமைத்து தர வேண்டும் என்று, கே.பி.சங்கர் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதையேற்று, ₹3 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதியுடன் கூடிய உள் விளையாட்டு அரங்கம் திருவொற்றியூரில் அமைக்கப்படும்,’’ என்றார். நிகழ்ச்சியில், கலாநிதி வீராசாமி எம்பி, மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: