செஸ் ஒலிம்பியாட் ஒத்திகை போட்டியில் சென்னை மாணவன் முதலிடம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நோபல் உலக புக் ரொக்கார்டில் இடம் பெற நடத்தப்பட்ட ஒத்திகை செஸ் விளையாட்டில், சென்னை கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா முதலிடத்தை தட்டி சென்றுள்ளார்.  மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட் - செரட்டான் ரிசார்ட்டில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், நோபல் உலக புக் ரெக்கார்டில் இடம் பெற இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1414 வீரர், வீராங்கனைகள் ஒரே நேரத்தில் அமர்ந்து, 707 எலக்ட்ரானிக்ஸ் செஸ் போர்டில் விளையாடினர்.  இதனை தொடர்ந்து நேற்று முன்தினம், காலை 10 மணிக்கு தொடங்கிய செஸ் விளையாட்டு இரவு 9 மணி வரை, தொடர்ந்து 9 மணி நேரம் செஸ் விளையாடி வீரர், வீராங்கனைகள்  அசத்தினர். போட்டிகள் 9 சுற்றுகளாக நடந்தது. இதில், 9 சுற்றுகளிலும் தோல்வியே சந்திக்காமல் சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா வெற்றி பெற்று முதல் பரிசு ₹30 ஆயிரத்தை தட்டிச் சென்றார். இதில், பங்கேற்ற 500 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரின், வங்கிக் கணக்கில் பரிசுத் தொகை செலுத்தப்படும் என இந்திய செஸ் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.  

இது குறித்து, முதல் இடம் பிடித்த கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா கூறுகையில், அட்சன் திருத்தங்கள் செஸ் அகாடமியில் முதன்மை பயிற்சியாளராக உள்ளேன். மேலும், சொந்தமாக ஜிஎம் விஷ்ணு செஸ் கிளப்பை இணையதளம் மூலமாக நடத்தி வருகிறேன். இதன் மூலம் 100 பேருக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.12 வயதில் செஸ் விளையாட தொடங்கி 23வது வயதில் ஸ்பெயினில் நடந்த செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றேன்.

இந்தியாவில், மொத்தம் 75 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அதில், நான் 33வது கிராண்ட் மாஸ்டர் ஆவேன். எனது, ஆன்லைன் கிளப்பில் இருந்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் குகேஷ் என்ற கிராண்ட் மாஸ்டர் ‘பி’ டீமில் இடம் பெற்று விளையாட உள்ளார். 90 சதவீதம் நமது நாட்டை சேர்ந்தவர்களே இறுதி போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது’ என கூறினார்.

Related Stories: