அரும்பாக்கம் கூவம் ஆற்றின் குறுக்கே இடிந்து விழும் நிலையில் தரைப்பாலம்: பொதுமக்கள் அச்சம்

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், 107வது வார்டுக்கு உட்பட்ட அரும்பாக்கம் மாதா கோயில் தெருவில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பள்ளி, கல்லூரி, வேலை உள்ளிட்ட தேவைகளுக்கு அங்குள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை கடந்து, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த தரைப்பாலம் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக பக்கவாட்டு தடுப்புகள் உடைந்து விழுந்து திறந்த நிலையில் உள்ளது. மேலும், தூண்கள் மற்றும் பாலத்தின் கான்கிரீட் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் அந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, அந்த பாலத்தின மீது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், இரவில் அவ்வழியே செல்பவர்கள் பீதியுடன் செல்கின்றனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த தரைப்பாலம் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் வாகனங்களில் பயணிக்கும்போது, பாலம் எங்கே விழுந்து விடுமோ என்று பயத்தில் வாகனத்தை ஒட்டி செல்லாமல் வாகனத்தில் இருந்து இறங்கி அதனை தள்ளிக்கொண்டு பாலத்தை கடந்து சென்று மீண்டும் வாகனங்களில் பயணிக்கும் நிலை உள்ளது.

இந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என்று சுமார் 10 வருடமாக போராடி வருகின்றோம். ஆனால் இதுவரை யாரும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. தற்போது திமுக ஆட்சி வந்தவுடன் புதிய பாலத்தை கட்டி தர கோரிக்கை வைத்தோம். அதன்படி புதிய பாலம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், அதன்பின்னர் எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது, இந்த பாலம் இடிந்து விட்டால் குடியிருப்பு பகுதிக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே எந்தவித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன், பழைய பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்டி தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: