தற்காலிக ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் பணியில் சேர்ந்தனர்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பின்படி, 2 ஆயிரம் பேர் தற்காலிக ஆசிரியர்களாக பணியில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உள்பட பல்வேறு காரணங்களால், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து முறைப்படி ஆசிரியர்களை நியமனம் செய்ய குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் ஆகும். எனவே, அதுவரை பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களால் மாணவர்கள் கற்றல் பாதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கருதியது.

அதனால், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்காமல் இருக்க தற்காலிகமாக 11 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்தார்.

அதற்கு பிறகு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அந்தந்த பள்ளித் தலைமை  ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்ததில், பல குளறுபடிகள் நடந்தது. அதன் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம்தேடி கல்வியில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள், என குறிப்பிட்ட தகுதியுள்ளவர்கள் மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும், அப்படி விண்ணப்பிக்கும் நபர்களுக்கே பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதனால் தகுதியுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பித்த நபர்களுக்கு தற்போது  தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 2 ஆயிரம் பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். அவர்களில் 152 பேர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள். இவர்கள் தற்போது பணியில் சேர்ந்துள்ளனர். இந்த கல்வியாண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளது மாணவர்களுக்கு ஆறுதலாக உள்ளது. தற்போது பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் பொதுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தின்படி பாடங்களை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: