மேகலாயா சொகுசு விடுதியில் பாலியல் தொழில் நடத்திய பாஜ தலைவர்: பெண்கள் உட்பட 73 பேர் கைது: 400 மதுபாட்டில், 500 காண்டம் பறிமுதல்

கவுகாத்தி: மேகலாயாவில் தனக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ஏராளமான அழகிய பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த மாநில பாஜ துணை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதியில் இருந்த ஏராளமான பெண்கள் உட்பட 73 பேரும் சிக்கினர். 400 மதுபாட்டில், 500 ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேகாலயாவில் முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் பாஜ துணைத் தலைவராக உள்ளவர் பெர்னார்ட் என்.மாராக். இவருக்கு சொந்தமாக மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் சொகுசு விடுதி (ரிசார்ட்) உள்ளது. இதில், ஏராளமான பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விடுதியின் பல அறைகளில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  மற்றொரு பக்கம் ஆபாச நடனம் நடந்து கொண்டிருந்தது. போதை பொருளை பயன்படுத்திய பலர் மயங்கி கிடந்தனர். போலீசாரை பார்த்ததும் இவர்கள் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். அங்கு இருந்த பெண்கள் உட்பட 73 பேரை கைது செய்தனர். பூட்டிய அறைகளில் வைக்கப்பட்டிருந்த 6 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அறைகளில் இருந்த 400 மதுபாட்டில்கள், 500 ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் சோதனையை அறிந்த பாஜ மாநில துணைத் தலைவர் மாராக் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த சூழலில், பெர்னார்ட் என்.மாராக் அளித்த பேட்டியில், ‘நான் தலைமறைவாகவில்லை. இந்த சோதனையின் பின்னணியில் மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா உள்ளார். என்னை பொய் வழக்கில் சிக்க வைக்க காவல்துறையுடன் கூட்டுச் சேர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளார். விடுதியில் அனுமதியற்ற செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் மோசமான செயல்களில் ஈடுபடவில்லை,’ என்றார். இதையடுத்து, பெர்னார்ட் என்.மாராக் போலீசார் கைது செய்தனர். பாஜ மாநில நிர்வாகிக்கும், முதல்வருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் சட்டவிரோத செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கைதாகி உள்ள மாராக் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: