பொருட்களை விரைந்து கொண்டு செல்லும் வகையில் அனைத்து வகை சாலைகளையும் மேம்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரம்

சென்னை: இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் நடக்கும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையிலும், பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டும் செல்லும் வகையிலும் சாலைகளை மேம்படுத்துவதில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஒன்றிய   சாலைபோக்குவரத்து  மற்றும் நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 63,31,77 கி.மீ நீளம் கொண்ட சாலைகள் உள்ளது. இவற்றை மேம்படுத்துவதில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மக்களையும், பொருட்களையும் ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வசதியுடன் நெருக்கமான தொடர்புடையது.  உற்பத்திக்கும், விற்பனை சந்தைக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுதான் சிறந்த போக்குவரத்து. நாட்டின் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்கும் சரக்குகளும், சேவையும் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

ஆனால், பல்வேறு இடங்களில் தொலைதூரப் பகுதிகளுக்கும், மலைப் பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. ஒருசில இடங்களில் நெடுஞ்சாலைகள் குறுகலாகவும், நெரிசலாகவும் சரிவர பராமரிக்கப்படாமலும் இருப்பதால், விரைந்து பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் நேரம் விரயமாவதுடன், மாசும் ஏற்படுகிறது. காரணம் அதிக அளவில் சரக்கு போக்குவரத்து சாலைப் போக்குவரத்து மூலமாகவே நடக்கிறது. ரயில் மூலம் பொருட்களை அனுப்பவதில் செலவு குறைவாக இருந்தாலும், சாலை போக்குவரத்தையே பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் சாலைகள் சரியாக இல்லாதது விபத்துக்கள் நடப்பதற்கும் ஒரு காரணமாக இருக்கிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் விபத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் மட்டும் அல்லாது அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற காரணங்களினால் சாலைகளை மேம்படுத்துவதில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அதாவது இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையானது 1,26,350 கி.மீ என்ற அளவில் இருந்தது. இதுவே 2019ம் ஆண்டு 1,32,499 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எளிதாக கொண்டு செல்ல முடிகிறது. இது ஏராளமானோருக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் அதிக எரிபொருட்கள் பயன்படுத்தப்படுவதும் குறைந்துள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கும் உதவி செய்கிறது. இதேபோல் மற்றொரு புறம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. அதவாது கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் 4,80,652 விபத்துக்கள் நடந்தது. அதில், 1,50,785 பேர் உயிரிழந்தனர். பிறகு விபத்தை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 3,66,138 ஆக குறைந்துள்ளது. இதேபோல் உயிரிழப்பும் குறைந்துள்ளது. 2020ம் ஆண்டில் மொத்தமாக நாடு முழுவதும் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சாலைகள் ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட்டு வருவதால் ஒவ்வொரு பிரிவுகளிலும் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளது.

Related Stories: