ஆன்லைனில் எளிமையாகவும், வெளிப்படைதன்மையாகவும் கட்டிட திட்ட அனுமதி வழங்க அதிகாரிகள் 20 பேர் நியமனம்: சிஎம்டிஏ அதிரடி அறிவிப்பு

சென்னை: ஆன்லைனில் எளிமையாகவும், வெளிப்படைதன்மையாகவும் கட்டிட திட்ட அனுமதி விரைந்து வழங்க 20 அதிகாரிகள் குழுவை நியமித்து சிஎம்டிஏ அதிரடி உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சிஎம்டிஏ) உட்பட பகுதிகளில் கட்டிட திட்ட அனுமதி பெற கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் திண்டாடினர். பல்வேறு துறைகள் ஆட்சேபனை சான்றிதழ் வாங்க பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இதனால், சாமானிய மக்கள் வீடுகளை கட்டவே தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அப்போதை ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ரியஸ் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளிட்ட செல்வந்தவர்களுக்கும் மட்டும் உடனே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

 இதுதொடர்பாக, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி, கட்டிட திட்ட அனுமதி பெற பணி எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தினார். இதில், கட்டிட திட்ட அனுமதி பெற மக்கள் ஆன்லைனில் ஒப்புதல் அளிக்கும் பணி எளிமையாகவும், வெளிப்படைதன்மையாகவும் இருக்க சில வழிக்காட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும் உறுப்பினர் செயலாளர் அன்ஷுல் மிஷ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது மக்களுக்கான கட்டிட திட்ட அனுமதி செயல்முறையை எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளும் வகையில், ஆன்லைனில் செயல்முறையை சிஎம்டிஏ உருவாக்கி உள்ளது. இந்த செயல்பாட்டில், திட்ட அனுமதி வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்க 20 துறைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப காரணங்களால் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்குவது தாமதமானது. இந்த விவகாரத்தை ஒருங்கிணைத்து, விரைவாகத் தீர்ப்பதற்காக, துணைத் திட்டப்பணியாளர் பிரிவில் இணைப்பு அலுவலர், துறையுடன் தொடர்பு கொள்ள கீழே உள்ள அட்டவணையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை, பொதுப்பணித்துறை, தெற்கு ரயில்வே, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மாநில நெடுஞ்சாலை துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போக்குவரத்து துறை, தொல்லியல் ஆய்வு துறை, தேசிய நினைவுச்சின்னம் ஆணையம், விமான போக்குவரத்து துறை ஆணையம், இந்திய விமானப்படை (தாம்பரம்), வெடிபொருள் துறை, எல்காட், தமிழ்நாடு வன மற்றும் சூற்றுச்சூழல் துறை, சிட்கோ, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய 20 துறைகளில் தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஒருங்கிணைக்க சிஎம்டிஏ இணைப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துணை திட்டமிடுபவர்கள் / தொடர்பு அலுவலர்கள் இது தொடர்பான முன்னேற்றத்தை தினசரி அடிப்படையில் இணைக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories: