டெட் தேர்வுக்கான விண்ணப்பத்தில் 27ம் தேதி வரை திருத்தலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள்- 1, மற்றும் 2 ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தங்கள் விண்ணப்பங்களில் வரும் 27ம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு  வாரியம் தெரிவித்துள்ளது.  கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டும் நடக்க உள்ளது. இதையடுத்து ஏப்ரல் 26ம் தேதி வரை இணைய தளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தாள் 1க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878பேரும், தாள் 2க்கு 4 லட்சத்து 1886 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய  வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. அதனால், விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட இரண்டு தாள் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இதற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, திருத்தங்கள் செய்ய விரும்புவோர் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தின் மூலம் திருத்தங்களை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தங்கள் செய்த பிறகு சமர்ப்பிக்கும் பொத்தானை அழுத்தி உறுதி செய்யாவிட்டால் முந்தைய விவரங்களே ஏற்று பரிசீலிக்கப்படும். விண்ணப்பத்தை சமர்ப்பித்து பணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே மாற்றங்களை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி, கல்வித் தகுதி ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியாது. தாள் 1, தாள் 2 ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் செய்ய இயலாது என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: