பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் விவகாரம் பொய் தகவல் பரப்பியோரை பிடிக்க கூடுதலாக 56 பேர் நியமனம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

சென்னை: கனியாமூர் பள்ளியில் மாணவிஸ்ரீ மதி மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் முழு பின்னணியை தோண்டி எடுக்கும் பணியில் காவல் துறை இறங்கி உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கனியாமூர் கலவர வழக்கில் இருந்து யாரும் தப்பாத வகையில், சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக எஸ்ஐக்கள் உட்பட 56 போலீசாரை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிஸ்ரீ மதி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், மாணவியின் உடலை பெற மறுத்து, பள்ளி முன்பு அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் முடிந்தது. பள்ளி மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும், மேஜை, நாற்காலி, ஏசி மெஷின்கள் ெகாள்ளையடிக்கப்பட்டது. இந்த கலவரத்தில் டிஐஜி பாண்டியன் உட்பட 52 போலீசார் படுகாயமடைந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக முதல் கட்டமாக போலீசார், 3 வழக்குகள் பதிவு செய்து பள்ளி தாளாளர் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும், கலவரம் தொடர்பாக தனி வழக்கு பதிவு செய்து வீடியோ ஆதராங்களின் படி 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். கலவரத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்தே ஆக வேண்டும். ஒருவரும் அதில் இருந்து தப்பிக்க கூடாது என்ற வகையில், விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உள்ளார். அந்த குழுவில்  சேலம் டிஐஜி பிரவீன் குமார் அபினபு, ஆவடி கமாண்டன்ட் ராதாகிருஷ்ணன், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி சிங்க்ஸ்லின், விழுப்புரம் கூடுதல் எஸ்பி திருமால், திருப்பத்தூர் கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம், நாமக்கல் கூடுதல் எஸ்பி சந்திரமவுலி ஆகியோர் இடபெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு புலனாய்வு குழு கலவரம் தொடர்பாக பள்ளியில் உள்ள சிசிடிவி, வீடியோ பதிவுகள், கலவரம் தொடர்பான வாட்ஸ் அப் குழு அனுப்பிய தகவல்கள், ஆட்களை திரட்டியவர்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள், பள்ளியின் பொருட்களை திருடியவர்கள் என ஒருவரையும் விடாமல் கைது செய்கின்றனர். இதற்காக, கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு குழுவில் 6 டிஎஸ்டிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமை காவலர், 2 காவலர்கள் என 18 பேரை கூடுதலாக நியமித்து டிஜிபி உத்தரவிட்டிருந்தார். பள்ளி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள காவல் துறை அதிகாரிகள் உடனுக்குடன் விசாரணை அறிக்கையை சேலம் டிஐஜி பிரவீன் குமார் அபினவிடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே விசாரணை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக 56 போலீசாரை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  போலீசார், சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் கலவரத்தின்போது பள்ளியின் அருகே  பயன்பாட்டில் இருந்த செல்போன் பயன்படுத்தியவர்கள் விபரங்கள், கலவரத்தின்  பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார். வாட்ஸ் அப் குழுக்கள், பள்ளியில் உள்ள  பொருட்கள் எடுத்து சென்ற நபர்கள் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்த  அமைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலை காவலர்கள் என 56 பேர். இவர்கள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு வீடு வீடாக சென்று கைது செய்வது, வழக்கை வேகமாக முடிக்க எப்ஐஆர் போடுவது, குற்றப்பத்திரிகை தயாரிப்பது மற்றும் குற்றவாளிகளை சிறையில் அடைப்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள். கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் டிஐஜி பிரவீன் குமார் அபினபு தலைமையில் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உட்பட 80 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: