தமிழகத்தில் 27ம் தேதி வரை மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 27ம் தேதி வரை தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தேவக்கோட்டையில் நேற்று 70மிமீ மழை பெய்துள்ளது. அம்பத்தூர் 60மிமீ, கடலூர் 50மிமீ, திருக்கழுக்குன்றம், தஞ்சாவூர், எடப்பாடி, ராசிபுரம் 40மிமீ, திருவாடனை, சின்னக் கல்லார், இளையங்குடி,லால்பேட்டை, குறிஞ்சிப்பாடி, மணல்மேல்குடி, வல்லம், திருப்பத்தூர், மதுராந்தகம், புலிப்பட்டி, வால்பாறை 30மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் தென் மேற்கு மழை தீவிரம் காரணமாக தமிழகத்திலும் மழை நீடிக்கும். மேலும் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்,  மாவட்டங்களில் 27ம் தேதி வரை கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இதற்கிடையே, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: