தமிழகத்தில் நடந்த 31 வது மெகா தடுப்பூசி முகாமில் 18 லட்சம் பேர் கோவிட் தடுப்பூசி செலுத்தினர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற 31 வது மெகா தடுப்பூசி முகாமில் 18.08 லட்சம் பேர் கோவிட் தடுப்பூசி செலுத்தினர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 1 லட்சம்  சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற 31 வது மெகா சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 18,08,600 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 1,41,985 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 5,49,164 பயனாளிகளுக்கும் மற்றும் 11,17,451 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 95.59% முதல் தவணையாகவும் 88.51% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு இன்று (25ம் தேதி) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: