டெல்டாவில் 3வது நாளாக மழை: வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டாவில் நேற்று 3வது நாளாக மழை பெய்தது. நாகை மாவட்டம் வேதாரணயம் சுற்றுவட்டார பகுதியில் காலை லேசான மழை பெய்தது.  வேதாரண்யம் பகுதியில் பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணி மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில்  உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் தேங்கிய தண்ணீரை மோட்டார் வைத்து அகற்றும் பணி நடந்து வருகிறது.

திருவாரூர் நகரில் நேற்று மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. இதேபோல் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மாலை 6 முதல் இரவு 7 மணி வரை மழை பெய்தது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு மழை பெய்தது. இதேபோல் தஞ்சை, பாபநாசம், வல்லம் பகுதியில் லேசான மழை பெய்தது. புதுக்கோட்ைட மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் லேசான மழை சாரல் பெய்தது. திருச்சி நகரில் இரவு 9.30 மணிக்கு துவங்கி அரை மணி நேரம் மழை பெய்தது. அதன்பிறகு லேசான சாரல் மழை பெய்தது. டெல்டாவில் ஒரு சில மாவட்டங்களில் நேற்றிரவு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதியாக தூங்கினர். டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் வானில் கருமேகங்கள் திரண்டு ரம்மியமான சூழல் நிலவியது.

Related Stories: