மேகாலயா மாநிலத்தில் பாஜக நிர்வாகியின் ரிசார்ட்டில் விபசாரம்?: 73 பேர் கைது; 400 மதுபாட்டில், 500 ஆணுறை பறிமுதல்

கவுகாத்தி: மேகாலயாவில் உள்ள பாஜக நிர்வாகியின் ரிசார்ட்டில் விபசாரம் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து 73 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில்  பாஜக மாநில துணைத் தலைவர் பெர்னார்ட் என்.மாராக் என்பவருக்கு சொந்தமான ரிசார்ட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த ரிசார்ட்டில் திடீர் சோதனை நடத்திய போலீசார், அங்கு விபாசாரம், ஆடல், பாடல், போதை பொருள் பயன்பாடு போன்ற செயல்களில் ஈடுபட்ட 73 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பாஜக துணைத் தலைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்டவர்களில் 6 சிறுமிகள் ரிசார்ட்டில் உள்ள அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். அங்கிருந்து 400 மதுபாட்டில்கள், 500 ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், ஆயுதங்கள் போன்றவை கைபற்றப்பட்டன’ என்று கூறினார். இதனிடையே, பாஜக மாநில துணைத் தலைவர் பெர்னார்ட் என்.மாராக் அளித்த பேட்டியில், ‘நான் தலைமறைவாகவில்லை; இந்த சோதனையின் பின்னணியில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளார். என்னை பொய் வழக்கில் சிக்க வைக்க காவல்துறையுடன் கூட்டுச் சேர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளார். ரிசார்ட்டில் அனுமதியற்ற செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் மோசமான செயல்களில் ஈடுபடவில்லை’ என்றார். இருந்தும் இவர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: