திண்டுக்கல்- குமுளி ரயில் பாதை சர்வே பணி துவக்க வேண்டும் : ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் தீர்மானம்

தேனி : திண்டுக்கல் முதல் குமுளி வரையிலான ரயில்பாதை திட்டத்திற்கு சர்வே பணியை துவக்க வேண்டும் என தேனியில் நடந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 7 வது மாநில மாநாடு நேற்று தேனியில் நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஞானதிருப்பதி வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட பொருளாளர் தாமோதரன் வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கைகளை தாக்கல செய்தனர். இதில் மாநில செயலாளர் ராஜசேகர், மாநில தலைவர் ரமேஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் துரைராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெகதீசன், ரவிச்சந்திரன், அர்ச்சுணன், மாவட்ட இணை செயலாளர்கள் ராஜகோபால், வினோத்குமார், சோனைராஜ், சின்னச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணி மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், ஊராட்சிகளில் பணிபுரியும் கணினி ஆபரேட்டர்கள், முழு சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர்களின் பணியை நிரந்தரப்படுத்த வேண்டும், தேனி நகரில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும், திண்டுக்கல் முதல் குமுளி வரையிலான ரயில்பாதைத் திட்டத்திற்கான சர்வே பணியை துவங்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுந்திரபாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories: