மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனையில் முழு உடல் மொபைல் சிடி ஸ்கேன் வசதி; உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனையில், முழு உடல் மொபைல் சிடி ஸ்கேன் வசதியை நேற்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். உலக அளவில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் நவீன தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை கொண்டு  சிகிச்சை அளிப்பதில், தமிழகத்தில் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது. அதனடிப்படையில்,  தமிழகத்தில்  முதல்முறையாக ₹ 5 கோடி மதிப்பில் 32 பரிமாண முழுஉடற்கூறு பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கான நடமாடும் முழு உடல் சிடி ஸ்கேன் கருவியை துவக்கி வைக்கும் விழா நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. விழாவில், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மொபைல் சிடி ஸ்கேன் கருவியை இயக்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, அவரிடம் கருவியின்   செயல்பாடுகள் குறித்து, மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரித்தீவ் மோகன்தாஸ் விளக்கி கூறினார்.

பின்னர், பிரித்தீவ் மோகன்தாஸ் நிருபர்களிடம் கூறுகையில் ‘‘இந்த மொபைல் சிடி ஸ்கேன் கருவி மூலம் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு விரைவாகவும், துல்லியமாகவும் 8 மடங்கு பாதுகாப்புடனும் சிகிச்சை அளிக்க முடியும். மொபைல் சிடி ஸ்கேன் கருவி  தீவிர எலும்பு முறிவு சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை, நரம்பியல், தண்டுவடம் தொடர்பான கடினமான அறுவை சிகிச்சைகள் மொபைல் சிடி ஸ்கேன் மூலம் எளிமையாக்கப்படும்’’ என்றார். இந்த விழாவில், நரம்பியல் பிரிவு இயக்குனர் ரிஷிகேஷ் சர்க்கார், டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் அறுவை சிகிச்சை முறை குறித்து விளக்கினர்.

Related Stories: