தேர்தல் புறக்கணிப்பு முடிவை மாற்ற மம்தாவுக்கு அவகாசம் உள்ளது: மார்கரெட் ஆல்வா பேச்சு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரான மார்க்ரெட் ஆல்வா நிறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில், இந்த தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்கப் போவதாக மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது தொடர்பாக மார்கரெட் ஆல்வா நேற்று அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சிகள் ஒரே கட்சியின் ஆட்சியை விரும்பவில்லை. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவை தெளிவாக உள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி இருக்க அவருடைய கட்சி முடிவு செய்திருப்பதால், அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

 

பாஜ.வின் வெற்றிக்கு மம்தாவால் உதவ முடியாது. அவர் மனதை மாற்றிக் கொள்வதற்கு போதுமான அவகாசம் இருக்கிறது. பாஜ அல்லாத முகாமில் நிலவும் வேறுபாடுகள் குடும்ப சண்டை போன்றது. அவர்கள் 2024ம் ஆண்டு சவாலுக்கு ஒன்றிணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்,” என்றார். 

Related Stories: