நகராட்சி நிர்வாகத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சேலம்: தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட அரசு துறை அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், காந்தி மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா, மாவட்ட கலெக்டர்கள் சேலம் கார்மேகம், நாமக்கல் ஸ்ரேயாசிங், தர்மபுரி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ₹1000 கோடியும், நமக்கு நாமே திட்டத்திற்கு ₹400 கோடியும்,சிறப்பு நிதியாக சென்னை மாநகராட்சிக்கு ₹890 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி பாகுபாடு இன்றி மின் மயானம் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு 75 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. நடப்பாண்டு மேலும் 75 இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கு தேவையான நிதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருந்தாலும், நிதி நிலைமை காரணமாக அதனை நிரப்ப முடியவில்லை. இருப்பினும் விரைவில் அதிகாரிகள் முதல், பணியாளர்கள் வரை நியமிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: