சிபிஎஸ்இ 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு: சென்னை மண்டலம் 3வது இடம்பிடித்து சாதனை

சென்னை:  மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கான  தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. 12ம் வகுப்பில் சென்னை மண்டலம் 97.79 சதவீத தேர்ச்சியையும், பத்தாம் வகுப்பு தேர்வில் 94.40 சதவீதம் தேர்ச்சியையும் எட்டியுள்ளது. இரண்டு தேர்வுகளிலும் நாட்டின் மொத்த தேர்ச்சியில் சென்னை மண்டலம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும்  12ம் வகுப்புகளில்   படித்த மாணவ, மாணவியர்களுக்கான தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன.  10ம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 24ம் தேதி வரையும்,  12ம் வகுப்புக்கான  தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரையும் நடத்தப்பட்டது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:  பனிரெண்டாம் வகுப்பு தேர்வை  நாடு முழுவதும் 14 லட்சத்து 35,366 பேர் எழுதினர். இவர்களில் 13 லட்சத்து 30,662 பேர் அனைத்து பாடங்களிலும்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 92.71%.

திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் 98.83 சதவீதம் தேர்ச்சி பெற்று நாட்டில் முதலில் இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு மண்டலம் 98.16 சதவீதம், சென்னை மண்டலம் 97.79 சதவீதம், டெல்லி கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்கள் 96.29 சதவீதம், அஜ்மீர் 96.01, சண்டிகர் 95.98, பஞ்ச்குலா 94.08, கவுஹாத்தி 92.06, பாட்னா 91.20, போபால் 90.74, புனே 90.48, புவனேஸ்வர் 90.37, நொய்டா 90.27, டேராடூன் 85.39, பிரயாக்ராஜ் 83.71% தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள்  மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 797 பேர். தேர்ச்சி வீதம் 9.39 சதவீதம். 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 33 ஆயிரத்து 432 பேர். இதன் தேர்ச்சி வீதம் 2.33 சதவீதம். 2022ம் ஆண்டு தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 67 ஆயிரத்து 743 பேர் திரும்பவும் தேர்வு எழுத வேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

10ம்  வகுப்பு தேர்வு முடிவுகள்:  சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை நடந்தது. இதற்காக  நாடு முழுவதும் 22 ஆயிரத்து 735 பள்ளிகளை சேர்ந்த  21 லட்சத்து 9 ஆயிரத்து 208 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 20 லட்சத்து 93 ஆயிரத்து 978 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்காக நாடு முழுவதும் 7405 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு எழுதியோரில்  19 லட்சத்து 76 ஆயிரத்து 668 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 94.40 சதவீதம். தமிழ்நாட்டில் மட்டும் 79049 மாணவ, மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 78911 பேர் தேர்வில் பங்கேற்றனர். 78582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 99.58%. மண்டல அளவில் திருவனந்தபுரம் 99.68% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு 99.22 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்திலும், சென்னை மண்டலம்  98.97 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.  

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பல்வேறு பள்ளிகளின் தேர்ச்சி வீதம் குறித்த விவரம் வருமாறு: ஜவகர்லால் நேரு வித்யாலயா 99.71 சதவீதம், சுயேச்சை 96.86 சதவீதம், கேந்திர வித்யாலயா பள்ளிகள் 96.61 சதவீதம், சிடிஎஸ்ஏ 91.27 சதவீதம், அரசுப் பள்ளிகள் 80.68 சதவீதம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 76.73 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று 2 லட்சத்து 36 ஆயிரத்து 993 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று 64 ஆயிரத்து 908 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 689 பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில்  1 லட்சத்து 47 ஆயிரத்து 967 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களுக்காக 1978 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இவர்களில் 80  ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் அரசுப் பள்ளிகள் இந்த தேர்வில் 82.66 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. சுயேச்சையான பள்ளிகள் 99.59 சதவீதம், ஜெஎன்வி பள்ளிகள் 100 சதவீதம், கேவிஎஸ் பள்ளிகள் 98.79 சதவீதம், தனியார் பள்ளிகள் 66.67 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளன. சென்னை மண்டலத்தில் தேர்வு எழுதியோரில் 1437 பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: