2022-23ம் நிதியாண்டின் மாநில வருவாய் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து கோட்டைக்கு வந்தார்

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 10 நாட்களுக்கு பிறகு நேற்று தலைமை செயலகம் வந்தார். அங்கு, 2022-23ம் நிதியாண்டின் மாநிலத்தின் வருவாய் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதில் அமைச்சர்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த 18ம்தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், வீட்டில் இருந்தே காணொலி காட்சி மூலம் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தலைமை செயலகம் வந்தார். காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் 2022-23 நிதியாண்டின் மாநிலத்தின் வருவாய் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், நிதித்துறை செயலாளர் முருகானந்தம், வணிகவரி ஆணையர் தீரஜ்குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனையின்போது, ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வாரம் மதுரையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் தற்போது அரிசி, கோதுமை, பாக்கெட்டில் விற்கும் மோர், தயிர் உள்ளிட்டவற்றுக்கும் ஒன்றிய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்தும் கூட்டத்தில் முதல்வர் ஆய்வு செய்தார்.

Related Stories: