தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி (TANSEED) யின் நான்காவது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ் நாடு புத்தொழில் ஆதார நிதி (TANSEED) யின் நான்காவது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இந்த ஆதார மானிய நிதி திட்டமானது தமிழ் நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க மையத்தின் செறிவார்ந்த  முன்னெடுப்பு ஆகும். புத்தாக்க சிந்தனையோடு இயங்கும் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு மானிய நிதியாக 10 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவையில் இந்த ஆண்டு துறைக்கான கோரிக்கை அமர்வின் போது, 100 புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பயன்பெறும் என தெரிவித்தார். 100 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் மொத்தம் 10 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார். மூன்று பதிப்புகளை தொடர்ந்து, தற்போது நான்காவது பதிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்க தொடங்கியுள்ளது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்.

புத்தாக்க சிந்தனையோடு இயங்கும் நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ள நிறுவனங்கள், சமூகத்தில் நன்மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக இயங்கும் நிறுவனங்கள் ஆகியவை இந்த மானிய நிதிக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் StartupTN மற்றும் Startup India -ல் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை தலைமையகமாக கொண்டிருக்கின்ற அல்லது தமிழ்நாட்டிற்கு இடம்பெயர தயாராக இருக்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நிதியினை பெற விண்ணப்பிக்க இயலாது.

இதுவரை மூன்று பதிப்புகளாக நடைபெற்று முடிந்த தமிழ் நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ் 60 நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன. இரண்டாவது பதிப்பில் தேர்வு செய்யப்பட்ட 19 நிறுவனங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தவணை நிதியினை வழங்கினார். மேலும் மூன்றாம் பதிப்பில் தேர்வான 31 நிறுவனங்களுக்கும் விரைவில் மானிய நிதியினை முதல்வர் வழங்க உள்ளார்.

தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தில் பயன்பெற்ற நிறுவனங்கள் வெற்றிகரமாக தங்களது புத்தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். சில நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு தேவையான முதலீடுகளை வெற்றிகரமாக துணிகர முதலீட்டின் வழி திரட்டியுள்ளனர்.

தகுதியான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள www.startuptn.in என்ற இணைய தளத்தினை பார்வையிடவும். ஏதேனும் கேள்விகள் இருப்பின் support@startuptn.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: