சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு எதிரான குற்றசாட்டு: சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் தனி காவல்துறை குழுவை அமைத்தது. அதன் தலைவராக ஐ.ஜி.பொன் மாணிக்கவேலை நியமித்தது. அவர் தலைமையில் ஒரு குழு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்தது. சிலை கடத்தல் தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு டி.எஸ்.பி.காதர் பாட்சாவை, பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2008ம் ஆண்டு விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சில ஐம்பொன் சிலைகள் காணாமல் போன விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு காதர் பாட்சா மீது குற்றச்சாட்டப்பட்டது.

அவரும் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் என்பவரும் சேர்ந்து அந்த சிலைகளை திருட்டுத்தனமாக விற்பனை செய்துள்ளதாக கூறப்பட்டு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், சஸ்பெண்டான காதர் பாட்சா தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது பிணையில் உள்ளார். பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதிகாரிகளும் மாறினர். இந்தநிலையில் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து காதர் பாட்ஷா தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது மனுவில் பொன் மாணிக்கவேல் தன்மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் காதர் பாட்ஷாவின் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

Related Stories: