சென்னை ஆலையில் தயாரித்த போர்டு நிறுவனத்தின் கடைசி காருக்கு ‘குட்பை’: கண்ணீருடன் வழியனுப்பிய ஊழியர்கள்

சென்னை: சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட போர்டு நிறுவனத்தின் கடைசி காருக்கு, ஊழியர்கள் நேற்று பிரியாவிடை கொடுத்து கண்ணீர் மல்க அனுப்பி வைத்தனர். போர்டு இந்தியா நிறுவனம், கடந்த 1926ம் ஆண்டு கனடா போர்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது. ஆனால், கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்க இயலவில்லை.

பின்னர் மீண்டும் 1995 அக்டோபரில், மகிந்திரா போர்டு இந்தியா என்ற பெயரில் இந்தியச் சந்தையில் மீண்டும் நுழைந்தது. பின்னர் 1998 மார்ச்சில், போர்ட் இந்தியா நிறுவனமாக மாறியது. போர்டு எண்டேவர், போர்டு ஐகான், போர்டு எஸ்கார்ட் உட்பட இந்த நிறுவனத்தின் பல மாடல்கள் பிரபலம் அடைந்தன. போர்டு நிறுவனத்தின் முதலாவது முக்கிய கார் உற்பத்தி ஆலை, 2 லட்சம் கார்கள் உற்பத்தி திறனுடன் மறைமலை நகரில் அமைக்கப்பட்டிருந்தது. எக்கோ ஸ்போர்ட் கார்களின் உற்பத்திக்கு பிரதான தொழிற்சாலையாக இது திகழ்ந்தது.

 ஆனால், உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல், பெரும் நஷ்டம் அடைந்த இந்த நிறுவனம், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. பின்னர், ஒன்றிய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்த இந்த நிறுவனம், சாதகமான சூழ்நிலைகள் இல்லாததால் அந்த முடிவில் இருந்தும் பின்வாங்கி விட்டது.

  அறிவித்தபடி, குஜராத் சதானந்தில் உள்ள ஆலை ஏற்கெனவே மூடப்பட்டாலும், சென்னையில் உள்ள ஆலை மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த மாத இறுதி வரை இயங்குவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை ஆலையில் கடைசியாக உற்பத்தி செய்யப்பட்ட எக்கோ ஸ்போர்ட் காருக்கு ஊழியர்கள் நேற்று பிரியா விடை கொடுத்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். இத்துடன் இந்த ஆலையும் மூடப்படுவதால், இந்திய கார் உற்பத்தியில் போர்டு நிறுவனத்தின் அத்தியாயம் முடிவுக்கு வந்து விட்டது. இதற்கு முன்பு  ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது உற்பத்தி ஆலைகளை மூடியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: