ரூ. 3.91 லட்சம் மதிப்பில் 23 மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடி படகுகள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், பங்காரம்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், இந்தோ ஜெர்மன் ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியுடன் டிஜ் என்ற நிறுவனம் சார்பாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த மீனவர் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 23 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம் ரூ.3.91 லட்சம் மதிப்பீட்டிலான மீன்பிடி படகுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் பி.ஸ்டீபன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மீன்பிடி படகுகளை வழங்கினார்.  

அப்போது அவர் பேசியதாவது,  கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த மீனவர் பெருங்குடி மக்களுக்கு 23 மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் மீன்பிடி படகுகளை பயன்படுத்தி கொரோனா பெருந்தொற்றினால் தந்தையை இழந்த குடும்பங்கள், இருளர் இன குடும்பங்கள், மாற்றுத்திறனாளி குடும்பங்கள், அதிக பெண் குழந்தைகள் வசிக்கின்ற குடும்பங்கள் உள்ளிட்ட 23 நலிவடைந்த குடும்பங்கள் தங்கள் குடும்ப வருவாயை உயர்த்தி கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்தில் பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குடும்ப வருமானம் கூடுவதினால் குழந்தைகளின் உயர்கல்வியை உறுதிப்படுத்துவதன் மூலமாக குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமண முறையை ஒழிக்க ஏதுவாக அமையும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார். இதில், ஒன்றிய குழுதலைவர் பா.வெங்கட்ரமணா,  துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஒன்றிய குழு உறுப்பினர் விஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பொற்செல்வி, ஊராட்சி தலைவர் ஜி.ஜோதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: