நண்பர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு எதிரொலி எடப்பாடி அவசரமாக இன்று டெல்லி பயணம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்

சென்னை: அதிமுக ஆட்சியில் அரசு பணிகளை எடுத்து செய்த கான்ட்ராக்டர்கள் வீடுகளில் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இச்சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி அவசரமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு நடக்கும் பிரியாவிடை நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் கடந்த 11ம் தேதி கைப்பற்ற முயன்றார். அப்போது, இரு கோஷ்டிகளும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதையடுத்து கட்சி தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சீல் அகற்றப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் முருகப்பெருமாளின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை நேற்று முன்தினம் முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் பல நூறு கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எடப்பாடி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கான்ட்ராக்ட் எடுத்து வரி ஏய்ப்பு செய்திருப்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது.இப்படி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் கட்சிக்குள் இருந்து நெருக்கடி, மற்றொரு பக்கம் தனது நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை, கோடநாடு பங்களா விசாரணை என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளித்து மீண்டு வர வேண்டும் என்றால், டெல்லியில் உள்ள பாஜ தலைவர்கள் உதவி செய்தால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு எடப்பாடி அணியினர் வந்துள்ளனர். இந்த நிலையில்தான் பாஜ சார்பில் நிறுத்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பிரியாவிடை அளிக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.

டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசவும் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி சந்திக்கும்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நான் (எடப்பாடி) தேர்வு செய்யப்பட்டுள்ளேன். கடந்த 5 வருடங்களாக அளித்த அதே ஆதரவை பாஜவுக்கு நாங்கள் அளிப்போம். அதேபோன்று, நீங்களும் (பிரதமர் மோடி) அதிமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். அதேநேரம், தனது நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னாள் அதிமுக அமைச்சர்களை குறி வைத்து வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இதன்மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. எனவே கட்சியை நடத்த, வருமான வரி சோதனைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைப்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மிகவும் நெருக்கடியில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி இந்த சூழ்நிலையில் டெல்லி செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேநேரம், டெல்லி பாஜ தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகிய 3 பேர் சேர்ந்த ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புவதாக பாஜ மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

* அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை கோரி வழக்கு: நிர்வாகிகள் பதில் தர சிட்டி சிவில் கோர்ட் உத்தரவு

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்குமாறு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உறுப்பினர் என கூறி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், பதவி நீக்கம் செய்யவும், நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு 4வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்கால மனு குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: