44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் மனித செஸ் போட்டி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.  44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளில் 188 நாடுகள் பங்கு பெறுகிறது. இப்போட்டிகளில் சுமார் 2,500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான துவக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 28ம் தேதி பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வர்  ஆகியோரால் துவக்கி வைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து, 26-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் செஸ் ஒலிம்பிக் போட்டிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மேம்படுத்தும் வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் செஸ் போட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செஸ் விளையாட்டு போட்டிகள், மராத்தான், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

அதனடிப்படையில், நேற்று  திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் உள்ள திருமுருகன் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படும் வண்ணம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மனித செஸ் போட்டியை துவக்கி வைத்தார்.  இந்த விழிப்புணர்வு மனித செஸ் போட்டியில் கல்லூரி மாணவியர்கள் முறையே கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஒவ்வொரு செஸ் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பங்கு பெற்றது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

இம்மனித செஸ் விளையாட்டு மூலம் பல்வேறு தரப்பு மக்களும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் செஸ் விளையாடும் எண்ணத்தை தூண்டும் வகையிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளைகோல் பயிற்றுநர் ஆனஸ்ட்ராஜ், கல்லூரியின் நிர்வாகிகள் தே.துரைவேலு, ஆ.சேகர், முதல்வர்  என்.எல்.அமுதாயி, பேராசிரியர்கள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: