சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் போட்டிக்கு தயாராகும் வகையில் அனைத்து பணிகளும் இன்றுடன் முடிகிறது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை : சர்வதேச செஸ் 44வது ஒலிம்பியாட்  போட்டிக்கு தயாராகும் வகையில், அனைத்து பணிகளும், இன்றுடன் முடிந்து விடும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் - செரட்டான் ரிசார்ட்டில் பழைய அரங்கம், புதிய அரங்கம், வாகன நிறுத்துமிடம், பொதுப்பணித் துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டுப்  பணிகளை, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது, அமைச்சர் எ.வ. வேலு நிருபர்களிடம் கூறுகையில்,  ‘‘சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். 188 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீரர்களின் மேற்பார்வையாளர்கள் என 3500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்கள், ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள விடுதிகளில் தங்குவார்கள். இங்கு, நிரந்தரமான அரங்கம் இருந்தாலும், புதிதாக ஒரு தற்காலிகமான அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்கும் இடங்களில் இருந்து வீரர்களை அழைத்துவர 100 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து, 50 கார்களும் நிறுத்தலாம்.  மேலும், ஓய்வு அறை, மருத்துவ அவசர சிகிச்சைக்கு வேண்டிய அறைகள், ஊடக செய்தியாளர்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அறை, முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. நாளை அனைத்து, பணிகளும் முடிந்து விடும். வீரர்கள், செல்லும் சாலைகளில் செப்பனிட வேண்டும் என கருதி கேளம்பாக்கம் முதல் திருப்போரூர் வரை ரூ.6.18 கோடியில் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து கொண்டு வருகிறது.

பழுதடைந்துள்ள, சாலைகளை புதுப்பிக்க ரூ.5.48 கோடி மதிப்பில் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரம், நகரத்தில் கடற்கரை செல்லும் சாலை, ஐந்து ரதம் சாலை, கிழக்கு ராஜவீதி சாலைகளின் இருபுறமும் கிரானைட் கற்கள் மற்றும் பேவர் பிளாக் பதிக்கும் பணி ரூ. 1.86  நடந்து வருகிறது. ராஜீவ் காந்தி, சாலையில் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை 20 கி.மீ வரை அழகுப்படுத்தும் பணிக்காக ரூ.3 கோடி ஒதுக்கி அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை, சாலையை அழகுப-டுத்த நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1.20 கோடி மதிப்பில் பணி நடந்து கொண்டு வருகிறது.

அக்கரை முதல் பூஞ்சேரி வரை சீர் செய்ய வேண்டும், அழகுப்படுத்த வேண்டுமென ரூ.7.65 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பல்லாவரம், முதல் துரைப்பாக்கம் வரை சாலைகளை சீர் செய்ய முதல்வர் உத்தரவிட்டதின் பேரில் ரூ.13.7 கோடி மதிப்பில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அண்ணா பன்னாட்டு, விமான நிலையம் முதல் சின்னமலை வரை ரூ. 10.70 கோடி மதிப்பில் பணிகள் நடக்கிறது. இது மட்டுமின்றி, மேம்பாலங்களில் பசுமை பூங்கா, நீரூற்று மற்றும் அழகுபடுத்த ரூ.1.65 கோடி மதிப்பில் பணி நடந்து கொண்டு வருகிறது. சாலைகளை அகலபடுத்துவது, விரிவுபடுத்துவது, நீரூற்று அமைப்பது, வெளிநாட்டினர் பாராட்டுகின்ற வகையில் பல்வேறு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், தமிழ்நாடு, முழுதும் மாவட்ட கலெக்டர்கள் பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என கூறினார்.

* கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை

சென்னை தலைமை செயலகத்தில், பல்வேறு துறைகளில் கட்டப்படும் கட்டிடங்களின் மதிப்பீடு தயார் செய்வதற்குரிய கட்டுமான பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் தினக்கூலிகள் அடங்கிய செந்தர விலை விவர பட்டியலை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதில் தவறில்லை. ஆனால் அங்கு நடைபெற்ற போராட்டம் ஜனநாயக போராட்டம் அல்ல.

இறந்த மாணவிக்கு  நியாயம் கேட்பதற்கு 3000க்கும் அதிகமான மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டதும், ஆய்வகங்கள் உடைக்கப்பட்டதும் நியாயமான நடவடிக்கையா? என்று பார்க்க வேண்டும்.அதே பள்ளியிலேயே படிப்பை தொடர மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளனர். அந்த மனுக்கள் அனைத்தும் முதல்வரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் விட்டு வைக்க மாட்டோம். அவர்கள் மீது 100 சதவீதம் நடவடிக்கை எடுப்போம்.

Related Stories: