தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் கிளை பரிந்துரை

மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் கிளை பரிந்துரைத்துள்ளது. டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க தலைவர் ஷீலா பிரேம்குமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவவதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு தற்காலிக ஆசிரியர் நியமனங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த வழிகாட்டுதலின்படி சென்னை ஐகோர்ட்டின் எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘‘ஐகோர்ட் கிளையில் இடைக்காலத் தடை உள்ளது. ஆனால், எப்படி நியமனத்திற்கான பணிகள் நடக்கிறது’’ என்று கேட்டார். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், ‘‘சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு அடிப்படையில் புதிதாக வழகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு, நியமன நடைமுறைகள் நடந்து வருகிறது. ஐகோர்ட் கிளையின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நியமன நடைமுறை துவக்கப்படவில்லை’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படக் கூடாது. இதனால், மாணவர்கள் நலன் பாதித்துவிடக் கூடாது என்பதன் அடிப்படையில் தான் இந்த நீதிமன்றமும், சென்னை ஐகோர்ட்டும் இருவேறுவிதமான இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இரு உத்தரவுகளும் மாறுபட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் இந்த உத்தரவுகளை எதிர்த்து அப்பீல் மனுவோ, சரிசெய்ய கோரியோ தான் மனு செய்திருக்க வேண்டும். இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே, குறிப்பிட்ட இந்த வழக்கை சென்னை அல்லது மதுரையில் எந்த தனி நீதிபதி விசாரிப்பது? இல்லாவிட்டால் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரிப்பதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: