தற்கொலை தடுப்பு படை அமைக்க தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழக அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், ஊடகங்களுக்கும் கமல்ஹாசன் ஆகிய நான் கண்ணீருடன் விடுக்கும் கோரிக்கை இது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20ம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இது சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் மனவலிமையை நம் பிள்ளைகள் மெல்ல இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

ஆசிரியர்களே, மாணவர்கள் தங்கள் வாழ்வின் கணிசமான நேரத்தை உங்களோடுதான் செலவிடுகிறார்கள். நீங்கள் அவர்களை பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். சொந்த பிள்ளையைப் போலவும், ஆரூயிர் நண்பனைப் போலவும் உங்கள் மாணவர்களை நடத்துங்கள். ஊடகங்கள்,  இலவச மனநல ஆலோசனை வழங்கும் தற்கொலை தடுப்பு மையத்தின் எண்களோடு சேர்த்து அளிப்பதை ஒரு சமூக கடமையாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு ‘தற்கொலை தடுப்பு படை’ ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள் நடப்பதைப் போல், பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி, அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள், மனக்குழப்பங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து உதவ வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: