திட்டமிட்டபடி நாளை வள்ளுவர் கோட்டத்தில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை, : தமிழகம் தழுவிய வணிகர்களின் கண்டன ஆர்ப்பாட்டம், திட்டமிட்டபடி நாளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என்று விக்கிரமராஜா அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழக அனைத்து தொழில்-வணிக சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில நிர்வாகிகளோடு கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

இதில், 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி விதிப்புக்கும், இதர மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் மீதான வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரித்தும், மாநில வேளாண் விளைபொருட்களுக்கான செஸ் வரி விதிப்பை மறுபரிசீலனை செய்து திரும்ப பெறக் கோரியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (22ம்தேதி) காலை 10.05 மணிக்கு நடைபெறவுள்ள தமிழகம் தழுவிய வணிகர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெற இருக்கிறது.

திட்டமிட்டு சில குழப்பமான செய்திகளை பதிவிட்டு, ஆர்ப்பாட்ட உணர்வினை நீர்த்து போகச் செய்கின்ற செயலை ஒரு சிலர் பரப்ப முற்படுகிறார்கள். பேரமைப்பை பொறுத்தவரை மக்கள் நலனிலும், வணிகர் நலனிலும் ஒருமித்த கருத்தோடு எப்போதும் போல் தனது உணர்வினை வெளிப்படுத்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது. இதை மீண்டும் வலியுறுத்துவதோடு, பேரமைப்பைச் சார்ந்த வணிகர்கள் எந்தவித ஒற்றுமைச் சிதறலுக்கும் இடமளிக்காமல், கட்டுக் கோப்போடு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டம் வெற்றி பெறவும், நமது நோக்கத்தை நிறைவேற்றிட ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: