வேளாங்கண்ணி திருவிழாவுக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுமா?: பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில்: வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மும்பை, கோவா, கொல்லம், திருவனந்தபுரம் போன்ற வெளி பகுதிகளிலிருந்தும் தமிழகத்தில் சென்னை, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை.

இந்த ஆண்டு வேளாங்கண்ணி திருவிழா வரும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அடுத்த மாதம் மும்பையிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கத்திற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே மண்டலம் வெளியிட்டுவிட்டது. இது போல தமிழகத்தில் நாகர்கோவிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக கடந்த 2019 ல் இயக்கியதை போல, இந்த முறையும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கவேண்டும். இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பை காலம் தாழ்த்தி வெளியிடும் போது பயணிகள் மத்தியில் இந்த தகவல் சேருவதில்லை. எனவே சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பை முன்னரே அறிவித்து ஒரு மாதம் முன்னரே சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவை தொடங்கவேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

Related Stories: