திண்டிவனம் அருகே பரபரப்பு மின்வேலியில் சிக்கி 3 விவசாயிகள் பலி

திண்டிவனம் :  திண்டிவனம் அடுத்த ராஜாம்பாளையம் கிராமத்தில் காட்டு பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி 3 விவசாயிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா பிரம்மதேசம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட வன்னிப்பேர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சவுக்கு, வாழை, உளுந்து, மணிலா ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

சவுக்கு தோப்பில் வசிக்கும் காட்டுபன்றிகள் அவ்வப்போது விவசாய நிலத்தில் சாகுபடி செய்யும் வாழை மரங்களை நாசம் செய்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சடகோபன் என்பவர், காட்டுபன்றிக்காக தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து உள்ளார். அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாமிக்கண்ணு மகன் முருகதாஸ்(40), ஏழுமலை மகன் வெங்கடேசன்(45), பொன்னுகண்ணு மகன் சுப்பிரமணி(34) ஆகியோர் விவசாய பணிகளை முடித்துகொண்டு சடகோபன் நிலம் வழியாக வீடு திரும்பி உள்ளனர்.  இருட்டில் காட்டுபன்றிக்காக வைத்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக அவர்கள் 3 பேரும் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

 இது தொடர்பாக அப்பகுதியில் சென்ற விவசாயி ஒருவர், 3 பேர் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். பின்னர் அங்கு திரண்ட மக்கள், மின்சாரத்தை துண்டித்து பிரம்மதேசம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் சீனுபாபு மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விவசாயி சடகோபனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: