தாம்பரம் மாநகராட்சியில் 10 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு: ஆகஸ்ட்டில் பயன்பாட்டிற்கு வருகிறது

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிதாக தாம்பரம் மாநகராட்சி தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. இதன் மேயராக வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயராக கோ.காமராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கழிவுநீர் குழாய்கள் பதிப்பது, கழிவுநீர் அகற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம், வீடுகளுக்கு இணைப்பு வழங்குவது உட்பட பல கட்டங்களாக பிரித்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் ரூ160.97 கோடி மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது, இந்த பணிகள் திமுக ஆட்சியில் துவங்கப்பட்டது என்பதால் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பணிகள் சரிவர நடைபெறாமல் தாமதம் ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

பாதாள சாக்கடைக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள்  சிரமத்திற்கு ஆளாகி வந்ததுடன், விபத்துகளும் அதிகரித்து வந்தது. அதுமட்டுமின்றி சில பகுதிகளில் இந்த பணிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறை சார்பில் உரிய அனுமதி வழங்காததாலும் பணிகள் தாமதமானது.இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கி, தற்போது 99 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள ஒரு சதவீத பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. பல்லாவரம் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் கீழ்கட்டளையில் உள்ள பிரதான கழிவுநீர் அகற்று நிலையத்தில் இருந்து பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.தாம்பரம் பகுதியில் கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு சுமார் 177.72 கிலோ மீட்டருக்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு 1.86 கிலோ மீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட உள்ளது.

அந்தப் பணியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களில் இருந்து பிரதான குழாய்களுடன் இணைக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. கிழக்கு தாம்பரம், ஈஸ்வரி நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் உள்ளதால் சுமார் 8 மீட்டர் மட்டுமே பணிகள் நிலுவையில் உள்ளது.  இது தவிர மாநகரம் முழுவதற்கும் வீடுகளில் இருந்து கழிவுநீர் குழாய்கள், பிரதான குழாய்களுடன் இணைக்கப்பட்டு கழிவுநீர் அகற்று நிலையங்கள் இரவு நேரங்களில் மட்டும் செயல்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக வரும் 31.8.2022க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல தாம்பரம் ஜிஎஸ்டி சாலையின் சர்வீஸ் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்காததால் அங்கு சுமார் 400 மீட்டர் என சிறிய பகுதிக்கு பணிகள் நடைபெற உள்ளது. 2009ம் ஆண்டு சுமார் ரூ160.97 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு தற்போது ரூ.200 கோடி ரூபாய் வரை இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு செலவாகியுள்ளது. 99 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டதால் மீதமுள்ள ஒரு சதவீத பணிகள் நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசாரின் அனுமதி கிடைத்தவுடன் மிக விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.

Related Stories: