மாணவி தற்கொலையால் கலவரம் சேலம் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: மாணவி தற்கொலை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் குறித்து விரிவான விசாரணை நடத்த சேலம் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூரில் மாணவி கடந்த 13ம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில், பள்ளி சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. டிஐஜி பாண்டியன் உள்ளிட்ட 52 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

பள்ளியில் நடந்த தாக்குதல் குறித்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்த சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபினபு, ஆவடி கமாண்டன்ட் ராதாகிருஷ்ணன், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் எஸ்பி கிங்க்ஸ்லின், விழுப்புரம் கூடுதல் எஸ்பி திருமாள், திருப்பத்தூர் கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம், நாமக்கல் கூடுதல் எஸ்பி சந்திரமவுலி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்படுகிறது.

இந்தக் குழு மாணவியின் மரணம், பள்ளியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் அதில் பதிவாகியுள்ள வீடியோக்கள் மூலம் விசாரணை நடத்துவது, வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் வதந்தியைப் பரப்பி, தவறான தகவல்களை வெளியிட்டு கலவரத்தை உருவாக்கியது குறித்து இந்த சிறப்பு புலனாய்வு குழு விரிவான விசாரணை நடத்தும். மேலும், இந்தக்குழு தங்களது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்வார்கள். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு புலனாய்வுக்குழு உடனடியாக தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

Related Stories: