மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு சமூக வலைத்தளங்களில் பிரசாரம் எதிரொலி போராட்டக்காரர்களை தடுக்க மெரினாவில் 300 போலீஸ் குவிப்பு: தடுப்புகள் அமைத்து ‘டிரோன்’ மூலம் தீவிர கண்காணிப்பு

சென்னை: ‘‘மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு மெரினாவில் ஒன்று கூடுவோம்’’ என்று வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யப்பட்டதால், மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களை தடுக்கும் வகையில் உதவி கமிஷனர் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் இறப்பில் மர்ம இருப்பதாக கூறி அவரது பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளி முன்பு அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம் திடீரென நேற்று முன்தினம் வன்முறையில் முடிந்தது.

இந்நிலையில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘மாணவி ஸ்ரீமதிக்கு நீதிகேட்டு’ இன்று மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவோம் என்று தகவல் பரப்பட்டது. அதேநேரம் போராட்டக்காரர்கள் கூடும் இடத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் 300 போலீசார் நேற்று அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக மெரினா காமராஜர் சாலையில் இருந்து மெரினா சர்வீஸ் சாலையை இணைக்கும் 7 வழித்தடங்களிலும், போலீசார் தடுப்புகள் அமைத்து உள்ளே யாரும் செல்லாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பேருக்கு மேல் ஒன்றாக வந்த வாலிபர்கள் மற்றும் மாணவர்கள் யாரையும் போலீசார் மெரினா கடற்கரைக்குள் அனுமதிக்கவில்ைல. பட்டினப்பாக்கம் முதல் மெரினா அண்ணாசதுக்கம் வரை உள்ள கடற்கரை முழுவதும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். படகுகள் மூலம் கடல் மார்க்கமாக யாரேனும் உள்ளே வருகிறார்களா என்று போலீசார் ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: