பயணிகளின் உயிரில் விளையாடும் விமான நிறுவனங்கள் ‘ஸ்பாட் செக்கிங்’கில் திடுக்கிடும் தகவல் அம்பலம்: ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: விமானங்கள் அடிக்கடி தரையிறக்கப்படுவதால் எழுந்த புகாரையடுத்து, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஸ்பாட் செக்கிங் செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.இந்திய விமான நிறுவனங்களின் விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் சம்பங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அதுவும் கடந்த சில வாரங்களாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப காரணங்கள் என்று கூறப்பட்டாலும், விமான நிறுவனங்களின் தொழில்நுட்ப அலட்சியம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இண்டிகோவின் ஷார்ஜா - ஐதராபாத் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. கடந்த 5ம் தேதி ஸ்பைஸ்ஜெட்டின் டெல்லி - துபாய் விமானம் எரிபொருள் பிரச்னையால் பாகிஸ்தானின் கராச்சிக்கு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் கோழிக்கோடு - துபாய் விமானம் மஸ்கட்டுக்கு  அனுப்பப்பட்டது; அதற்கு ஒரு நாள்  முன்னதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பஹ்ரைன்-கொச்சி விமானத்தில் உயிருடன்  பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. அதனால் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் விமானங்களில் ‘ஸ்பாட் செக்கிங்’ செய்தனர்.

அப்போது சில அதிர்ச்சிகரமான புகார்களும், திடுக்கிடும் தகவல்களும் கண்டறியப்பட்டன. குறிப்பாக பணியாளர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப வசதிகள் குறைபாடு, பராமரிப்பின்மை ஆகியன கண்டறியப்பட்டன. அதையடுத்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்  வெளியிட்ட அறிவிப்பில், ‘உரிமம் பெற்ற தொழில்நுட்ப பொறியாளர்களின் பாதுகாப்பு அனுமதி வழங்கிய பின்னரே, எந்தவொரு விமான நிறுவனத்தின் விமானமும், விமான நிலையத்திலிருந்து புறப்பட அனுமதிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் வரும் 28ம் தேதிக்குள் நிலை அறிக்கையை சமர்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: