சின்னமனூர் அருகே நீர்வரத்து கால்வாயாக மாறிய ஆக்கிரமிப்பு வயல்-விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னமனூர் : சின்னமனூர் அருகே, ஆக்கிரமிப்பு வயல் மீட்கப்பட்டு, குளத்தின் நீர்வரத்து கால்வாயாக அதிகாரிகள் மாற்றியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சின்னமனூர் அருகே, உத்தமபாளையம்-முத்துதேவன்பட்டி மாநில நெடுஞ்சாலையில் மார்க்கையன்கோட்டை மற்றும் குச்சனூர் பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளின் இடையே 41 ஏக்கரில் பழமை வாய்ந்த சுண்டகாயன்குளம் உள்ளது. ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்கப்படும் முல்லைப்பெரியாறு பாசன நீர் இங்கு சேமிக்கப்படுகிறது.

 இப்பகுதியில் இருபோக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, சுண்டகாயன்குளத்து தண்ணீர் பயன்படுத்தப்படும். ஆண்டுக்கு 8 மாதம் வரை சுண்டகாயன் குளத்தில் தண்ணீர் தேங்குவதால், நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயிகளுக்கு பயன்பட்டு வந்தது. இந்நிலையில், சுண்டகாயன் குளத்தில் 50 ஏக்கரை ஆக்கிரமித்தனர். இதனால், தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், பொதுமப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், குளத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஆக்கிரமிப்பு வயலையும் மீட்டனர்.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், எல்லப்பட்டி-மார்க்கையன்கோட்டை மெகா தடுப்பணை பகுதியிருந்து குச்சனூருக்கு வரும் கால்வாயுடன், சுண்டக்காயன்குளத்தை இணைத்துள்ளனர். இதற்காக மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு வயலில் நீர்வரத்து கால்வாய் அமைத்துள்ளனர். இதனால், குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: