திரு.வி.க நகர் தொகுதி 72வது வார்டில் குப்பை கழிவுகளால் தூர்ந்த கால்வாய்

பெரம்பூர்: வடசென்னையில் பல இடங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ளதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள கழிவுநீர் இணைப்புகளை சட்டவிரோதமாக கால்வாயில் விடுகின்றனர். மேலும் கால்வாயை சுற்றியுள்ள உணவகங்கள் மற்றும் காய்கறி கடை வைத்துள்ளோர் தங்களது கடைகளின் கழிவுகளை இரவு 10 மணிக்கு மேல், யாருக்கும் தெரியாமல் இந்த கால்வாயில் கொட்டி விட்டு செல்கின்றனர்.இதனால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு குப்பை கழிவுகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. எத்தனை முறை தான் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை தூர்வாரினாலும், தொடர்ந்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பை கழிவுகளை கொட்டுவதால் மீண்டும் பழைய நிலையே ஏற்படுகிறது.

அந்த வகையில் திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட 72வது வார்டு நரசிம்மா நகர் 4வது தெருவில் உள்ள கால்வாயில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், காய்கறி கழிவுகள் என அனைத்து கழிவுகளும் கொட்டப்படுவதால், நீரோட்டம் தடைபட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடந்த 3 மாதத்திற்கு மேல் இந்த கால்வாயில் குப்பை கழிவுகள் அடைந்துள்ளன. இதுகுறித்து பலமுறை திருவிக மண்டல அலுவலகத்தில் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தற்போது இரவு நேரத்தில் தினமும் மழை வருவதால் தண்ணீர் அதிக அளவில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாயை சுத்தம் செய்து மீண்டும் இதில் குப்பைகள் சேராத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: