குன்றத்தூர் அருகே பெண்களுக்கு இலவச ஆடுகள்

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், பூந்தண்டலம் ஆகிய ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது. சிறுகளத்தூர் மற்றும் பூந்தண்டலம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பெரும்பாலும் வறுமை கோட்டிற்கு கீழ் அதிகமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசின் திட்டத்தின் கீழ், கணவனை இழந்து வாழ்க்கையில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்கள் 17 பேருக்கு முதல் கட்டமாக ஐந்து ஆடுகள் வீதம் மொத்தம் 85 ஆடுகள் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வழங்கப்பட்டது.

 சிறுகளத்தூர் அம்பேத்கர் விளையாட்டு திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன்,துணை தலைவர் கோவிந்தராஜி, மாவட்ட கவுன்சிலர் ஹரி, ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், பூந்தண்டலம் ஊராட்சி தலைவர் ஞானப்பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். முன்னதாக கால்நடை மருத்துவர்கள் ஆடுகளை முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து, அவற்றிற்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகள் அளித்து, குளுக்கோஸ் தண்ணீர் கொடுத்து, அவற்றிற்கு எவ்வாறான உணவுகள் வழங்க வேண்டும், அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினர். இதில் சிறுகளத்தூர், பூந்தண்டலம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறுகளத்தூர் ஊராட்சி சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Related Stories: