பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்: போக்குவரத்து பாதிப்பு

பெரியபாளையம்:  பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்  ஆடித் திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.  பக்தர்கள் கொண்டு வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரியபாளையத்தில் உள்ளது சுயம்பாக எழுந்தருளி புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று ஆடி திருவிழா  கோலாகலமாக தொடங்கியது. ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நேற்று அதிகாலை அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து திரு ஆவணங்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மாலை மூலவர் அபிஷேகம், சூரிய பிரபையில் உற்சவர் பவானி அம்மன், உமா மகேஸ்வரி அலங்கார வாகனத்தில் பெரியபாளையம் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள்  பெரியபாளையம் வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, இங்கு வாடகைக்கு விடுதிகளை எடுத்து தங்கி மொட்டை அடித்து கோயில் வளாகத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடு கோழி என பலியிட்டு உடல் முழுவதும் வேப்பிலை ஆடைகளை அணிந்து கோவில் சுற்றி வளம் வந்து  நேர்த்தி கடனை செலுத்தினர்.  பின்னர் பவானி அம்மனை நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கொண்டு வந்த கார், ஜீப், வேன், பேருந்துகள், மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டது.

இதனால் சென்னை - திருப்பதி சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெர்ச்சலை சீர் செய்ய போலீசார் கடும் அவதிப்பட்டனர். மேலும் இந்த போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் அளவில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே சென்னை - திருப்பதி சாலையில் வந்து செல்லும் கனரக வாகனங்களை திருப்பி விட வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு  அருகே உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை நாள்  திருவிழா சிறப்பாக நடைபெற்றது விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவை  முன்னிட்டு சுற்று வட்டார  கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வந்து முடி காணிக்கை செலுத்தி   கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து செண்பகா தேவி அம்மனுக்கு படையல் இட்டு  நெய் விளக்கு ஏற்றி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.   மேலும்  இப்பகுதியில் விழாவில் அதிக அளவில் பக்தர்கள் வருகை காரணத்தினால்   பெரியபாளையம் திருவள்ளூர்  இடையே தாமரைப்பாக்கம் சாலை பகுதியில் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: