திருவொற்றியூரில் துர்நாற்றம் வீசுவதால் நவீன கருவியில் காற்று பரிசோதனை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் கடந்த சில தினங்களாக சிலிண்டர் வாயு காற்றில் பரவி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கண் எரிச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், மணலியில் உள்ள சிபிசிஎல் ஒன்றிய அரசு நிறுவனம்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனாலும் வாயு துர்நாற்றம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், திருவொற்றியூரில் முகாமிட்டு, 5 இடங்களில், ‘தெர்மோ பாசினல் சாம்பிலர்’ பொருத்தி, காற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாசு கலப்பு உள்ளதா என கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருவொற்றியூர் கலைஞர் நகர், காலடிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பெரியார் நகரில் செயல்படும் தனியார் பள்ளி கட்டடம் என, உயரமான கட்டடங்களில், நவீன கருவிகள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. 8 மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு சேகரிக்கப்படும் மாதிரிகள், ஆய்வு கூடத்தில் கொடுத்து சோதனை செய்து, காற்றில் மாசு கலப்பு உள்ளதா என கண்டறியப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories: