14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் மாநாடு

திருவள்ளூர்: திருவள்ளூரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் 2வது வட்ட மாநாடு நடைபெற்றது. இதில் வட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் வேணு வரவேற்றார். இந்த மாநாட்டில் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு விழா சிறப்புரையாற்றினார். மாநாட்டின் நோக்கம் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் விளக்க உரையாற்றினார். இதில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 விழுக்காடு என்பதை 30 விழுக்காடாக வழங்க வேண்டும்.

பணி மூப்பு காலங்களை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதேபோல் கிராம உதவியாளர்கள் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும். கிராம உதவியாளர்கள் பதவி உயர்வு பெறும்போது, கிராம நிர்வாக அலுவலர்கள் 20 விழுக்காடு, அலுவலக உதவியாளர்கள் 10 விழுக்காடு என முழுமையாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றினர்.  இந்த மாநாட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், வட்ட நிர்வாகிகள், வட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Related Stories: