ராஜிவ்காந்தி சாலையில் குண்டும் குழியுமாக மாறிய சர்வீஸ் சாலை: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலை அடையாறு மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை சுமார் 22 கிலோ மீட்டர் தூரம், ரூ.300 கோடி மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், இச்சாலையை கடப்பதற்கு ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜிவ்காந்தி சாலை அமைந்துள்ள மத்திய கைலாஷ் முதல் செம்மஞ்சேரி வரை சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் சென்னை மாநகராட்சியின் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் அமைந்துள்ளது. இச்சாலையில் சர்வீஸ் சாலைகள் சீராக இல்லை. அத்துடன் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் சர்வீஸ் சாலை சில இடங்களில் அகலமாகவும் சில இடங்களில் மிகவும் குறுகலாகவும் மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால், பைக்குகளில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து,  படுகாயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களும் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சில இடங்களில் கழிவுநீர் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்லாப்புகள் உடைந்து காணப்படுகிறது. சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்தியும், கொடிக்கம்பங்கள் அமைத்தும், சிறுகடைகள் வைத்தும் பலர் ஆக்கிரமித்துள்ளனர். நடை பாதையை ஆக்கிரமித்து சிறு கடைகள் வைத்துள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘ராஜிவ்காந்தி சாலையில் குண்டும் குழியுமாக உள்ள சர்வீஸ் சாலையை சீரமைக்கவும், உடைந்து கிடக்கும் ஸ்லாப்புகளை மாற்றி அமைக்கவும், நடைபாதையில் உள்ள கடைகள் மற்றும் கொடிக்கம்பங்கள் மற்றும் அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே,  சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: