தேனாம்பேட்டையில் டியுசிஎஸ் சார்பில் காமதேனு திருமண மண்டபம்: அமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னை: திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டியுசிஎஸ்) இந்தியாவின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக திகழ்கிறது. தற்போது, சென்னையில் டியுசிஎஸ் நிறுவனம் மூலம் 253 நியாயவிலை கடைகள், 5 மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள், 5 சுயசேவை பிரிவுகள், 12 எரிவாயு கிளைகள், 8 கூட்டுறவு மருந்தகங்கள், 2 அம்மா மருந்தகம், 2 பெட்ரோல் பங்க், ஒரு எழுதுபொருள் பிரிவு, 5 பண்ணை பசுமை காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் அறிவித்தபடி, மயிலாப்பூர் சித்திரை குளத்தில் டியுசிஎஸ் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபமும், மாதவரத்தில் வாடகை அடிப்படையில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோன்று எழும்பூர், வில்லிவாக்கம், ஷெனாய் நகர், சைதாப்பேட்டை பஜார் ரோடு, சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, தாம்பரம் (கிழக்கு), தாம்பரம் (மேற்கு), அம்பத்தூர், பெரியார் நகர் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்தபடி சென்னை, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் காமதேனு வளாகத்தில் டியுசிஎஸ் சார்பில் ‘காமதேனு திருமண மண்டபம்’ கட்டப்பட்டுள்ளது. புதிய திருமண மண்டபத்தை நாளை மாலை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைக்கிறார்.

விழாவில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நே.சிற்றரசு, தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., ஆயிரம் விளக்கு எம்எல்ஏ நா.எழிலன், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன், பேரவை செயலாளர் இரா.பொன்னுராம், கூட்டுறவு பண்டகசாலை பொதுச்செயலாளர் சு.தம்மநாபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை டியுசிஎஸ் திராவிட தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சாமிநாதன் செய்து வருகிறார்.

Related Stories: