கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாநிலத்தின் 20 இடங்களில் தமிழ்நாடு நாள் விழா

சென்னை: கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை மற்றும் தமிழகத்தின் 20 இடங்களில் தமிழ்நாடு நாள் விழா கலை நிகழ்சிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி அரசு சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் 18.07.2022 அன்று கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வழங்குவதோடு மணல் சிற்பம் உருவாக்கப்படும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, செம்மொழி பூங்கா மற்றும் சென்டரல் சதுக்கம் ஆகிய 4 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

வடலூர் முத்துலீப் குழுவினரின் நையாண்டி மேளம், புரவியாட்டம், திருப்பத்தூர் குமரேசன் குழுவினரின் பம்பை கைச்சிலம்பாட்டம், காவடியாட்டம், கொக்கலிக் கட்டையாட்டம், தேனி செல்வகுமார் குழுவினரின், கரகாட்டம், கருப்பசாமி ஆட்டம், ஆகிய கலை நிகழ்சிகள் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் 20 இடங்களில் தமிழ்நாடு விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயமுத்தூர், மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிகள் வாயிலாகவும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கரூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அரசு இசைப்பள்ளிகள் வாயிலாகவும் இயல், இசை, நாட்டியம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்படுகிறது.

Related Stories: